திருச்சி: மகன் கண் முன்னே தாய் உடல் நசுங்கி சாவு
திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அதவத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவரது மனைவி கண்ணம்மா (வயது 80). இவர்களது மகன் கோவிந்தராஜ். இவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மெயின் கார்டு கேட் நோக்கி சென்றனர். இருசக்கர வாகனத்தை மகன் கோவிந்தராஜ் ஓட்டி செல்ல பின் இருக்கையில் தாய் கண்ணம்மா அமர்ந்திருந்தார். அப்பொழுது இவரை பின் தொடர்ந்து ஜங்ஷனில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது அந்த தனியார் பஸ் திடீரென்று இருசக்கர வாகனத்தின் வலது புறத்தில் சைடு போட்டு செல்லும் போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கோவிந்தராஜ், கண்ணம்மா இருவரும் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தனர். அப்பொழுது பின் சீட்டில் அமர்ந்திருந்த கண்ணம்மா தூக்கி எறியப்பட்டு தனியார் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.