தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்ப போட்டி கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நேற்று முன் தினம் நிறைவடைந்தது.
இதில் 20 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினர்.
மினிஸ்டர் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 45 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு 13 தங்கம், 6 வெள்ளி, 16 வெண்கலம் என 35 பதக்கங்களை வென்று நேற்று ரயில் மூலம் திருச்சி வந்தடைந்தனர். இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், பொது மக்கள், பெற்றோர்கள் ஆகியோர் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் விஜயகுமார், பயிற்சியாளர்கள் சரவணன், கமலேஷ் லோகநாதன், சேஷாத்திரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.