திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் அருகே 22 ஏக்கரில் ரூ. 236 கோடியில் ஒருங்கிணைந்த காய்கனிகள், மலர்கள், பழங்கள் வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு சந்தை அமைப்பது தொடர்பாக, திருச்சி காந்திசந்தையில் உள்ள அனைத்து வியாபார சங்கங்களின் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம், திருச்சி-தஞ்சாவூர் சாலையில் உள்ள வலிமா மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் யூ. எஸ். கருப்பையா தலைமை வகித்தார். செயலாளர் எம். கே. எம். காதர் மைதீன், பொருளாளர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதிய காய்கனி சந்தைக்கான கட்டட வேலைகள் தொடங்கும் முன்பாகவே, அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளை கலந்து ஆலோசித்து எந்தெந்த வியாபாரத்துக்கு எவ்வளவு சதுர அடிகள் தேவைப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
எனவே, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் சந்தையை கட்டுவதற்கு முன்பாக வியாபாரிகளின் கருத்துகளை கேட்டு முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.