தா. பேட்டையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர்
ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் தா. பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய நிர்வாகி தனம் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் பெருமாள் அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தங்கவேல், மாவட்ட தலைவர் சாமிநாதன், மாவட்ட துணைத் தலைவர் அமுதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். அப்போது சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு தேர்தல் வாக்குறுதி கோரிக்கை அரசு ஊழியராக ஆக்கப்பட்டு முறையான ஊதியம் வழங்க வேண்டுதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7 ஆயிரத்தி 850 அல்லது தொகுப்பு ஊதியத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குவது போல் ரூ 6 ஆயிரத்தி 750 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர். இதில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஓய்வூதிய சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய செயலாளர் சுமதி நன்றி கூறினார்.