சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 6ம் தேதி காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சித்திரை தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. முன்னதாக காலை 10.30 மணி அளவில் கோவிலில் இருந்து உற்சவர் சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். 11 மணியளவில் தேரானது இழுக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் தீச்சட்டி ஏந்தியும் முடி காணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.