திருச்சி மாவட்டம் முசிறி அருகே மாங்கரைபேட்டை கிராமத்தில் ஒரே நாளில் ஒன்பது கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே மாங்கரைபேட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள அருள்மிகு விநாயகர், அய்யனார், மாரியம்மன், பகவதி அம்மன், மாங்கனாச்சி அம்மன், வேல்கருப்பு சுவாமி, மாசிபெரியண்ணசுவாமி, மதுரை வீரன் சுவாமி உள்ளிட்ட கோயில்கள் திருப்பணிகள் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் 600 வருடங்களுக்கு பிறகு 9 கோயில்களுக்கும் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தீர்த்தகுடம் எடுத்து வருதல், கணபதிஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து கோயில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அப்போது டிரோன் மூலம் கோபுர கலசங்களுக்கும் ரோஜா பூக்கள் தூவப்பட்டது. பின்னர் டிரோன் மூலம் பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனிதநீர் பெற்று சுவாமி தரிசனம் செய்தனர்.