திருச்சி மாவட்டம் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்தார், மண்டல துணை வட்டாட்சியர்கள் செந்தில்குமார் (துறையூர்), தனபாக்கியம். (முசிறி), மஞ்சுளா (தொட்டியம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விவசாய குறைதீர் கூட்டத்தில் முசிறி கோட்டத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை கோட்டாட்சியரிடம் தெரிவித்தனர். இதில் கோட்டப்பாளையம் வைரி செட்டிபாளையம் பகுதிகளில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், சீரக சம்பா நெல்லிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும், சீரக சம்பா நெல்லிற்கு கூடுதல் விலைவழங்க வேண்டும் வன விலங்குகள் இடமிருந்து விவசாயிகள் பயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், ஜம்பேறி உள்ளிட்ட ஏரிகள் அனைத்தும் தூர் வார வேண்டும், பரிசல்துறை ரோடு சாலையை சீரமைக்க வேண்டும், புலிவலம் பகுதியில் உள்ள கருங்குட்டைக்கு நீர்வரத்து இல்லாததால் தனிநபர்கள் ஆக்கிரமிப்பால் அந்த குட்டை இருக்கும் இடம் மறைந்து விட்டது, இந்த குட்டையினை கண்டறிந்து அந்த குட்டைக்கு வரும் நீர் வழிகளை சீரமைத்து விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் சேர்க்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயி கோரிக்கை வைத்தார், கோரிக்கைகளை பெற்ற கோட்டாட்சியர் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.