திருச்சி தென்னூரில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தில்லை நகர் போலீசார் உதவியுடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதில் தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த ஜமால் மைதீன் மற்றும் மொயினுதீன் காஜா ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 7 கிலோ 800 கிராம் புகையிலைப் பொருட்களை தலைநகர் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் புத்தூர் ரோடு அருகே கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து உறையூர் போலீசார் உதவியுடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
இதில் புதுக்கோட்டை மண்டையூர் செப்புலதோப்பை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் கடையில் புகையிலை விற்கப்பட்டது தெரியவந்தது. இதைக்கேட்ட அதிகாரிகளை பன்னீர்செல்வம் தகாத வார்த்தைகள் பேசி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். அவரை உறையூர் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 27 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.