சமயபுரம் கோயிலை சுற்றியுள்ள பழக்கடைகளில் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமயபுரம் கோயிலை சுற்றியுள்ள தற்காலிகமாக கடை நடத்துவோர் குறைந்த விலைக்கு பழ வகைகள் மற்றும் தின்பண்டங்களை விற்பதாக கூறி எடை மோசடி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ ஆப்பிள் 150 ரூபாய், மாதுளை 180 ரூபாய், ஆரஞ்சு எண்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சமயபுரம் மாரியம்மன் கோயில் பகுதியில் இரண்டு கிலோ ஆப்பிள், மாதுளை 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.
அதனை பக்தர்கள் ஆவலுடன் வாங்கும் போது இரண்டு கிலோவுக்கு 750 கிராம் குறைவாக இருப்பதாக தெரிகிறது. இது குறித்து கேட்டால் கடை உரிமையாளர்களுக்கும் பக்தர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதனால் இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் கோயிலை சுற்றியுள்ள பழக்கடைகள் மற்றும் தின்பண்ட கடைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தலையிட்டு ஆய்வு நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.