அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், தி.மு.க. அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 'யார் அந்த சார்?' என்று அனைத்து அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், மாணவர்கள் அமைப்பினர் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் 'யார் அந்த சார்?' என்ற ஸ்டிக்கர் பிரசாரத்தை, அ.தி.மு.க. கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக முழுவதும் அதிமுகவினர் 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த இரண்டு நாட்களாக சட்டசபைக்கு வரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், 'யார் அந்த சார்?' என்ற ஸ்டிக்கரை தங்கள் சட்டையில் வைத்திருந்தனர். இந்த நிலையில் திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் இன்று காலை திருச்சி தில்லை நகர் 7வது கிராஸ் பகுதியில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகம் முன்பு நிர்வாகிகளின் இரு சக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் 'யார் அந்த சார்?' என்கிற ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் இன்று தொடங்கி வைத்தார்.