பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரைச் சேர்ந்தவர் ஜெயராமன் வயது 50. இவர் திருச்சி தில்லைநகரில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி பெரம்பலூரில் இருந்து தனது கடைக்கு கணக்குகளை சரிபார்க்க வந்தவர், மீண்டும் பெரம்பலூர் திரும்பி காரில் சென்றபோது, திருச்சி - சென்னை பைபாஸ் இருங்கலூர் பெட்ரோல் பங்க் அருகே ஜெயராமனின் காரை மர்மநபர்கள் மூன்று பேர் வழிமறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து விலை உயர்ந்த செல்போன், ரூ. 5, 000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து ஜெயராமன் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் திருச்சி செந்தண்ணீர்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (எ) முகமது கான் சாகிப், சங்கலிண்டபுரத்தைச் சேர்ந்த பாலா (எ) பாலமுருகன் பாலக்கரையைச் சேர்ந்த சந்தோஷ் ஆகிய மூன்று பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மூன்று பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு டூவீலர், கத்தி மற்றும் ரூ. 3, 800 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.