திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் உள்ள தாருகாவனேஸ்வரர் கோயில் அடிமனை வாடகைதாரர்கள் நல சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் அம்மனுவில் கோயிலின் செயல் அலுவலரால் நியாய வாடகை நிர்ணயக் குழுவால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு கடிதம் எங்களுக்கு கடந்த மாதம் 17ஆம் தேதி வழங்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி 12 தவணைகளில் முதல் தவணையாக 2 லட்சத்து 17 ஆயிரத்திற்கான காசோலையை கடந்த மாதம் 24 ஆம் தேதி கோயில் செயல் அலுவலருக்கு அனுப்பி விட்டோம். அதனைப் பெற்றுக் கொண்டு அதற்கு உண்டான நிலுவைத் தொகை ரசீது, நன்கொடை ரசீது, வாடகை ரசீது இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் மின்சார வசதி, குடிநீர், தெரு விளக்கு, சுகாதார வசதிகள் இல்லாமல் இருக்கின்றோம்.
மேலும் இரண்டாவது தவணைத் தொகையான ஒரு லட்சத்து பதினெட்டு ஆயிரத்திற்கான காசோலையை கோயில் செயல் அலுவலருக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி பதிவு தபாலில் அனுப்பினோம். அதை அவர் வாங்க மறுத்துவிட்டார். நேற்று முன்தினம் ஜனவரி 1 அன்று அந்த தபாலை பெற்றுக் கொண்டோம். எனவே தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து தங்கள் குடும்பங்களை வாழ வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.