திருச்சிக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக வந்த அவா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா். அமைச்சா்கள் கே. என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக் கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மகளிா் உரிமைத் துறை, உழவா் நலத்துறை ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள அலுவலா்களுக்கு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
பின்னா் அவா் கூறுகையில், மாவட்டம்தோறும் அரசின் சிறப்புத் திட்டங்களின் தற்போதைய நிலை, அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு முழுமையடைந்த பிறகு அதன் விரிவான அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்யவுள்ளேன். இதுவரை நடைபெற்ற ஆய்வில் அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளன என்பதை உறுதி செய்துள்ளோம். திருச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை அளித்துள்ளோம். அவை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது என்றாா் அவா்.