திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் திருச்சி சமயபுரம் நால்ரோடு அருகே உள்ள தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு அக்கினி சட்டி எடுத்தல் பால்குடம் எடுத்தல் மற்றும் குழந்தையை தொட்டில் வைத்து கொண்டு வருதல் அழகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் இந்த தெப்பக்குளத்தில் இருந்து தான் எடுத்து வரப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஏற்றும் மினி வேன் ஒன்று அந்த தெப்பக்குளத்தில் உள்ளே மூழ்கியுள்ளது, இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் குளத்தில் உள்ளே வாகனம் இறங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் சமயபுரம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வந்து வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் அப்போது வாகனத்தில் உள்ளே யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் இந்த வாகனம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. வாகனத்தை யார் அங்கு நிறுத்தியது வாகனம் தானாக தெப்பக்குளத்தில் உள்ளே இறங்கியதா யாரேனும் வாகனத்தை உள்ளே தள்ளிவிட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.