தூத்துக்குடி மாவட்டத்தில் 2 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை புதூர் ஊராட்சி ஒன்றியம் முத்துசாமிபுரம் கிராம ஊராட்சி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் அயன்பொம்மையாபுரம் கிராம ஊராட்சிகளில் மே 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
கிராம சபை கூட்ட நடவடிக்கைகளை நிர்ணயி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. முத்துசாமிபுரத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கதிரவன், சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார வள பயிற்றுநர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார். சமூக தணிக்கை மாவட்ட வள அலுவலர் மணி கூட்டத்தை வழிநடத்தினார். இதில் சமூக தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.