இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்புத் தொழிலில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையால் ஏராளமான உப்பளங்கள் சேதம் அடைந்தன. இதனால் அந்த உப்பளங்களை சீரமைத்து மீண்டும் உப்பு உற்பத்தியை தொடங்குவதற்கு உப்பு உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். இதனால் தாமதமாக உப்பு உற்பத்தி தொடங்கியது.
அதன்பிறகு அவ்வப்போது பெய்த மழையால் சிறு சிறு தடங்கல்கள் ஏற்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஒரு மாதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வெயில் அடிக்கிறது. அதே நேரத்தில் காற்றும் வீசி வருவதால் உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்து உள்ளது.
அதே நேரத்தில் உப்பு விலையும் குறைந்து உள்ளது. ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனையான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஒருடன் உப்பு ரூ. 3 ஆயிரமாகவும், ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனையான சாதாரண உப்பு ரூ. 2500 ஆகவும் குறைந்து உள்ளது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் உப்பை தேக்கி வைக்கும் நடவடிக்கைளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.