விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த "மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா" தர்ஹா மற்றும் பள்ளிவாசலில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் "சந்தனக்கூடு திருவிழாவானது" மதவேறுபாடின்றி அனைத்து தரப்பு மதத்தினராலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் முன்னிலையில் இந்தாண்டிற்கான "சந்தனக்கூடு" திருவிழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு இன்று(04. 09. 2024) மாலை 5 மணி அளவில் தர்காவில் இருந்து புறப்பட்ட இஸ்லாமியர்கள் பட்டாசுகள் வெடித்து, ராஜமேளத்துடன் வெண்கொடி ஏந்தி வைப்பார் கிராமம் முழுவதும் தீன்கொடி தொடர் நகர்வலம் சென்றனர். பின்னர் தர்காவை வந்தடைந்த வெண்கொடியை கொடிமரத்தில் ஏற்றப்பட்டு வெகு விமர்சையாக "சந்தனக்கூடு கொடியேற்றம் நிகழ்ச்சி" சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து மத வேறுபாடின்றி தர்காவிற்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.