வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் இந்த மாதம் 15-ந்தேதி வரை மீனவர்கள் சரியாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. பின்னர் சகஜநிலை திரும்பியதை தொடர்ந்து கடந்த 16-ந்தேதி முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில் புயலுக்கு பின்னர் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்த நாட்டுப்படகு மீனவர்களுக்கு நல்ல மீன் பாடு இருந்ததால், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது.
வழக்கம் போல் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமும், வியாபாரிகள் கூட்டமும் அலைமோதியது. இதன் காரணமாக மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. பொதுவாக மார்கழி மாதத்தில் மீன்கள் விலை குறைந்து காணப்படும். மீன்களுக்கு நல்ல விலை கிடைக்காது. ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு நேற்று மீன்களின் விலை உயர்ந்தது.
திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று ஒரு கிலோ பெரிய சீலா மீன் ரூ. 1, 200 வரை விற்பனையானது. அதுபோல் சிறிய சீலா மீன்கள் ரூ. 800 வரை விற்பனையானது.