தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கபடி போட்டியை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் தங்களுக்கு 2023-2024 ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை கிடைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தியதன் பேரில் தற்போது தங்களுக்கு பயிர் காப்பீடு தொகை கிடைத்துள்ளதாக விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் பச்சை துண்டை அவருக்கு அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி கபடி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர் ராஜகுமார், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.