தூத்துக்குடி: விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

50பார்த்தது
தூத்துக்குடி:  விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் மற்றும் எட்டையபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு பயிரிட்ட தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களுக்கு தற்போது வரை 2023-2024-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்றும், புதூர் வட்டாரத்தில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த டிசம்பர் 11-ம் தேதி ஏராளமான விவசாயிகள் புதூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது புதூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தி டிச. 20-ம் தேதிக்குள் பயிர்க்காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர். ஆனால் அதிகாரிகள் சொன்ன தேதியை கடந்தும் தற்போது வரை விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து இன்று புதூர் பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து விளாத்திகுளம் வட்டாட்சியர் மற்றும் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி டிச. 27ஆம் தேதிக்குள் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர். இதனை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி