விவசாய விளை நிலங்களை பாதிக்காமல் சிப்காட் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், விளாத்திக்குளம் வட்டம், பகுதியில் வெம்பூர், கீழகரந்தை, மேலகரந்தை, பட்டித்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்கு கம்மாய், குளங்கள், கிணற்று பாசனமும் உள்ளது.
மேலும் இருக்கன்குடி அணை கட்டின் பாசன பகுதியும் இந்த கிராம பகுதியில் உள்ளபடியால் இந்த பகுதியில் சிப்காட் அமைத்தால் வருத்து கால்வாய், கம்மாய், குளம், கிணற்றுப் பாசன பகுதிகள் பாதிக்கும் விவசாயத்தையே நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. ஆகவே தமிழக அரசு மேலே குறிப்பிட்ட இடங்களை தவிர்த்து விவசாயம் பாதிக்காதவாறு வேறு இடத்தில் சிப்காட் அமைத்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.