தூத்துக்குடி: மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்களை வழங்கிய அமைச்சர்

741பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி டுவிபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முதல் நாளான இன்று விலையில்லா சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார். 

இதைத்தொடர்ந்து அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு சீருடைகள், பிஸ்கட் மற்றும் இனிப்புகளையும் அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரின் ஊட்டச்சத்து மேம்பட வேண்டும் என்ற வகையில் சத்துணவு திட்டமாக இருந்தாலும் காலை உணவு திட்டமாக இருந்தாலும் அதுபோல் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்குழந்தைகளுக்கு முதல் கட்டமாக இரண்டு ஜோடி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மேலும் இரண்டு ஜோடி சீருடைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.