தூத்துக்குடி மாநகர பகுதி மற்றும் முத்தையாபுரம் பகுதிகளில் தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் 78 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த ஒரு வாரமாக வழிபாடு நடைபெற்று வந்தன.
இதைத் தொடர்ந்து இன்று(செப்.15) பிற்பகல் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தபசு மண்டபத்திலிருந்து 46 விநாயகர் சிலைகள் இந்து முன்னணி மாநகர செயலாளர் ராகவேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகரின் முக்கிய விதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் திரேஸ்புரம் சங்குமுக விநாயகர் கடற்கரை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
இதேபோன்று முத்தையாபுரம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புதிய துறைமுக கடற்கரை பகுதியில் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதை முன்னிட்டு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன மேலும் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பதை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.