தூத்துக்குடியில் நாய் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பரோட்டா கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் ராமையா லாட்ஜ் அருகே தனியாருக்கு சொந்தமான பரோட்டா கடை உள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை இரவு சுமார் 8. 30 மணியளவில் அந்த கடை அருகே ஒரு தெருநாய் படுத்திருந்தது. இதையடுத்து அந்த நாய் மீது கடை நிர்வாகிகள் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த நாய் வலியில் கதறி துடித்தது. நாயின் சத்தம் கேட்கவே அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அங்கு சென்று கடைக்காரர்களை கண்டித்துள்ளனர். இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். போலீசார் நடத்திய சமாதான பேச்சுார்த்தைக்கு பின்னர் அந்த நாய் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மனித நேயமற்ற இச்செயலை சமூக வலைதளங்களில் பலரும் கண்டித்து வருகின்றனர்.