மாவட்டத்தில் பலத்த மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

69பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 93 மிமீ மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, ஆங்காங்கே பெய்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது வெயிலும் தலைகாட்டியது. பின்னர் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. தூத்துக்குடி நகர் பகுதியில் இரவு 10 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

மேலும், திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் (மிமீ): தூத்துக்குடியில் 20, ஸ்ரீவைகுண்டம் 64, திருச்செந்தூர் 55, காயல்பட்டினம் 93, குலசேகரபட்டினம் 18, சாத்தான்குளம் 26, கோவில்பட்டி 8, கழுகுமலை 14, கயத்தார் 67, கடம்பூர் 40, எட்டயபுரம் 5. 20, விளாத்திகுளம் 20, சூரங்குடி 6, ஓட்டப்பிடாரம் 46, மணியாச்சி 65, வேடநத்தம் 26, கீழ அரசரடி 10 என மாவட்டத்தில் மொத்தம் 583. 20 மிமீ மழை பெய்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி