உலக வெறிநாய்க்கடி (ரேபிஸ்) தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக ரேபிஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ் ஆலோசனையின்படி மாவட்டம் முழுவதும் உதவி இயக்குநர்களான ஆண்டனி சுரேஷ், செல்வக்குமார், ஜோசப்ராஜ், விஜயஸ்ரீ தலைமையிலான மருத்துவக்குழுவினர் இலவச ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம்களை நடத்தினர்.
தூத்துக்குடியிலுள்ள கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் தொடங்கி வைத்தார். இதில், மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் நாய்களுக்கு தடுப்பூசி போட்டனர்.
மாவட்டத்திலுள்ள 71 கால்நடை மருந்தகங்கள், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி மருத்துவமனைகள் மற்றும் தூத்துக்குடி பெருகால்நடை மருத்துவமனை மூலமாக நேற்று(செப்.28) 1203 நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டு, வரும் 2030ம் ஆண்டுக்குள் ரேபிஸ் நோயை ஒழித்திடுவோம் என்ற உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ் தலைமையில் உதவி இயக்குநர்கள், கால்நடை மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் செய்திருந்தனர்.