தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மாவட்ட முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா கடந்த 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா சப்பரப்பவனி வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பனிமய மாதா பேராலய திருவிழாவை பக்தர்கள் வெகு சிறப்பாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் ஆகஸ்ட் 5ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை அடைத்து விடுப்பு வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் நெப்போலியன் கோரிக்கை விடுத்துள்ளார்.