தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 442 வது ஆண்டு திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாவை முன்னிட்டு பனிமயமாதா பேராலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திவ்ய நற்கருணை பவனி இன்று இரவு நடைபெற்றது. பனிமயமாதா ஆலய வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திவ்ய நற்கருணை பேழையை தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை கைகளில் ஏந்தி நகர் வளாகம் முழுவதும் பவனியாக கொண்டுவரப்பட்டு பனிமய மாதா ஆலயம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு அருள் ஆசி உரை வழங்கப்பட்டது. இந்த நற்கருணை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதங்களைக் கடந்து கலந்து கொண்டனர்.
இந்த திருவிழாவின் முக்கிய திருவிழாவான 10ம் திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி பனிமய மாதாவின் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.