தூத்துக்குடி: குழந்தைகளை விதிகளைமீறி ஏற்றி சென்ற 32 வாகனங்கள் பறிமுதல்

69பார்த்தது
தூத்துக்குடி: குழந்தைகளை விதிகளைமீறி ஏற்றி சென்ற 32 வாகனங்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து பள்ளிகளும் கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், வேன்கள் போன்ற தனியார் வாகனங்களில் அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட விதிமுறை மீறல்கள் உள்ளனவா என்று போக்குவரத்து துறை அலுவலர்கள், போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

நேற்று 2-வது நாளாக வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் மற்றும் போலீசார் வாகன தணிக்கை நடத்தினர். ஆட்டோ, வேன்களில் அளவுக்கு அதிகமான பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்கின்றனரா, முறையான உரிமம் வைத்துள்ளனரா, அனைத்து ஆவணங்களும் உள்ளனவா என்று சோதனை நடத்தினர். கடந்த 2 நாட்களாக நடந்த சோதனையில், அதிகமான குழந்தைகளை ஏற்றிச் சென்ற 7 ஆட்டோக்கள், 2 வேன்கள், ஒரு ஆம்னி வேன் உள்பட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 32 வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதே போன்று போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் விதிமீறல் தொடர்பாக 208 வழக்குகளை பதிவு செய்து, ரூ. 1 லட்சத்து 78 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதே போன்று 2-வது நாளாக நேற்று 111 வழக்குகள் பதிவு செய்து, ரூ. 91 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். இந்த சோதனை ஜூன் மாதம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி