தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலைய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரே பைக்கில் வந்த 4 பேரை மடக்கி விசாரித்தனர். அந்த பைக்கை 17 வயது சிறுவன் ஓட்டி வந்தது தெரியவந்தது. அந்த பைக்கை போலீசார் பறிமுதல் செய்து மத்தியபாகம் போலீஸில் ஒப்படைத்தனர். இதேபோன்று வி.இ.சாலையில் போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, 15 வயது சிறுவன் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது. அந்த பைக்கை பறிமுதல் செய்து தென்பாகம் போலீஸில் ஒப்படைத்தனர். இந்த இரு சம்பவங்களிலும் சிறுவர்களை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி அளித்த பெற்றோரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இருவருக்கும் மொத்தம் ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 18 வயது நிரம்பாத இளஞர்களை மோட்டார் வாகனங்கள் ஓட்டினால் இதுபோல் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.