தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கிலுள்ள ஏராளமான கிராமங்களில் பக்தர்கள் தசராகுடில் அமைத்து குழுவாக விரதம் இருந்து காணிக்கை பிரித்து அம்பாளுக்கு செலுத்துவர். அந்தந்த பகுதியில் கும்பம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்நிலையில் தட்டார்மடம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்படும் தசரா குழுக்களுக்கான ஆலோசனை கூட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட தசரா குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தசரா குழுவினர் சாதி அடிப்படையிலான ஆடை அணியக்கூடாது. சுவரொட்டி, டிஜிட்டல் போர்டுகளில் சாதி தலைவர்கள் படங்களை பயன்படுத்த கூடாது. பெண்களை வைத்து ஆபாச நடனங்களை நடத்தக்கூடாது. அவ்வாறு செய்வது தெரியவந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது போலீஸ்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சாதி ரீதியான தசரா குழு அமைத்து செயல்பட கூடாது. தசரா குழுவில் போலீஸ் வேடம் அணிவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தசரா குழு நிர்வாகிகள் இதனை ஏற்றுக் கொண்டனர்.