திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடு குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந் தேதி காலை 9. 30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்காரம் 24. 10. 2023 அன்று இரவு 12 மணிக்கு நடக்கிறது. 25. 10. 2023 அன்று கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குலசேகரன்பட்டினம் கிராமம் முழுவதும் சுகாதார முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உபயோகத்துக்கு எல்லப்பன் நாயக்கன் குளத்துக்கு தண்ணீர் திறந்து விட தாமிரபரணி கோட்டம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் குலசேகரபட்டினம் பஞ்சாயத்து மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். விழா நாட்களில் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட வேண்டும். என்றார்.