தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் கிராமத்தில் பத்திரகாளி அம்மன் கோவிலில் கொடை விழா நடைபெறுகிறது. இவ்விழாவிற்காக குலையன்கரிசல் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் கோகுல் (17) உட்பட வாலிபர்கள் சிலர் 3 பைக்கில் குலசேகரப்பட்டினம் கடற்கரை மற்றும் திருச்செந்தூர் நாழிக்கிணறு ஆகிய இடங்களில் தீர்த்தம் எடுத்துவிட்டு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுப்பதற்காக சென்றுள்ளனர். முக்காணி பாலத்தின் கீழ் பகுதியில் தீர்த்தம் எடுப்பதற்காக கோகுல் தண்ணீரில் இறங்கினார். அப்போது அவர் ஆழமான பகுதிக்குச் சென்றதால், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளார்.
இதைப்பார்த்த அவருடன் சென்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்று ஆற்றுக்குள் இறங்கினர். ஆனால் நீச்சல் தெரியாததால் அவர்களும் தண்ணீரில் தத்தளித்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 3 பேரை மீட்டனர். ஆனால் கோகுல் மட்டும் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கோகுல் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குலையன்கரிசல் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.