தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசும்போது மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஏற்கனவே 495 குற்றவாளிகளை 107, 110, ஆகிய பிரிவுகளின் கீழ் உதவி கலெக்டர் முன்னிலையில் பிரதான பத்திரம் தாக்கல் செய்து உள்ளோம். 137 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பதற்காக தனியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 602 கொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அந்த வழக்குகளை விசாரணைக்கு வரும்போது வழக்கை விரைந்து முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
இது போன்று கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்களை பிடிப்பதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் உன்னி கிருஷ்ணன் தலைமையில் 105 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் தனியாக கூட்டம் நடத்தி பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.