புகார் குழு அமைக்க வேண்டும்: ஆட்சியர் எச்சரிக்கை!
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 10 க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின்படி உள்ளக புகார் குழு அமைத்திட வேண்டுமென சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் அரசுத் துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், சிறு, குறு நிறுவனங்கள், அமைப்புச்சாரா பணியிடங்களில் மற்றும் பெரிய- சிறிய அளவிலான மளிகைக் கடைகள் முதலான அனைத்துப் பணியிடங்களில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் (ஒரு பெண் பணியாளர் இருந்தாலும்) பணிபுரியும் பட்சத்தில் அங்கு ஒரு மாத காலத்திற்குள் உள்ளக புகார் குழு அமைத்து அதன் விவரத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், உள்ளக புகார் குழு அமைக்கப்படாமல் இருந்து, சட்ட விதிமுறைகளை மீறினால் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.