தூத்துக்குடி: அஞ்சலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு

62பார்த்தது
தூத்துக்குடி: அஞ்சலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள நியூகாலனி துணை அஞ்சலகத்தில் ஆதார் சேவை நேரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இங்கு காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இது முற்றிலுமாக பொது நலன் கருதியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பள்ளிக்குழந்தைகள் மற்றும் வேலைக்குச் செல்வோரின் ஆதார் தொடர்பான சிரமத்தைப் போக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த அஞ்சலக ஆதார் சேவை மையங்களில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் இல்லை. குழந்தைகளுக்கு 5-7 வயது மற்றும் 15-17 வயதில் செய்ய வேண்டிய கட்டாய கைரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் இல்லை. பெயர், வீட்டு முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட திருத்தங்களுக்கு கட்டணம் ரூ.50, புகைப்படம், கைரேகை, கருவிழி திருத்தங்கள் மேற்கொள்ள கட்டணம் ரூ.100 ஆகும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அஞ்சல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சி. முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி