தூத்துக்குடி: விபத்துக்குள்ளான வாகனத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு

80பார்த்தது
தூத்துக்குடி: விபத்துக்குள்ளான வாகனத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு
தூத்துக்குடி சங்கரப்பேரி கிராமம் நடுத் தெருவைச் சார்ந்த முருகேசன் என்பவரது வாகனம் கமுதி அருகிலுள்ள புதுக்கோட்டை என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென இடது பக்க முன் சக்கர டயர் வெடித்ததால் நிலை தடுமாறி பாலத்தில் இடித்து இடது ஓரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இது அங்குள்ள காவல் நிலையத்தில் புகாராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 அதன் பின்னர் இந்த வாகனத்தை பழுது பார்க்கும் நிறுவனத்திடம் சரி செய்ய ஒப்படைத்துள்ளனர். இதற்கான செலவுத் தொகையை தருமாறு பொதுத் துறை இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்திடம் உரிய ஆவணங்களுடன் புகார்தாரர் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் பணத்தை தர மறுத்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முருகேசன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ. சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் விபத்துக்குள்ளான வாகனத்தில் ஏற்பட்ட சேதத்திற்கு 6,82,243 ரூபாய் மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 1,00,000 வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆகியவற்றை இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்

தொடர்புடைய செய்தி