திருச்செந்தூர், திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 7 இடங்களில் புதிய திட்டப் பணிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 7 இடங்களில் பல்வேறு நிதித் திட்டங்களின் கீழ், புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை மீன்வளம்- மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா. ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவதி தலைமையில் நேற்று (02.01.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அதன்படி, திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், அதாவது திருச்செந்தூர் நகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 36 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செந்தூர் பேருந்து நிலைய ஓடுதளம் மேம்பாட்டுப் பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் கோவங்காடு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ. 13.16 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தினைத் திறந்து வைத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.