தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏர் பஸ் விமானம் வந்து செல்லும் என்ற அறிவிப்பு பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் நான்கு வழிப்பாதைகளையும் கொண்ட ஓரே மாவட்டம் தூத்துக்குடி தான். வான்வழி, தரைவழி, ரயில் வழி, கப்பல் வழியென நான்கு தடங்களையும் உள்ளடக்கிய தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் ஐந்தாவது தடமாக விண்வெளி தடமும் அமைய உள்ளது. தொழிற்சாலைகள், துறைமுகம் என வளர்ந்து வரும் நகரமாக துாத்துக்குடி இருந்து வருகிறது. பர்னிச்சர் பார்க், வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் என அடுத்தடுத்து புதிய திட்டங்கள் துாத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் ஐந்து முறை விமானமும், பெங்களூருக்கு இருமுறை விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்கள் வசதிக்காக தூத்துக்குடி விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 227. 33 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் அமைத்தல் உள்ளிட்ட விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த புதிய பயணிகள் முனையம் 17 ஆயிரத்து 341 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.