தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது வேன் மோதி மாநகராட்சி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரைச் சேர்ந்தவர் ஆதிசன் மகன் மனோகரன் (55), மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் குப்பை வண்டி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு மனோகரன் முத்தையாபுரம் - புதிய துறைமுகம் ரோட்டில் நடந்து சாலையை கடக்க முயன்றபோது துறைமுகத்திலிருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் வேன் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஷோபா ஜென்ஸி வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான, பழையகாயல் அருகில் உள்ள பொட்டல்காடு, விநாயகபுரத்தைச் சேர்ந்த விஜயன் மகன் முத்தண்டகுமார் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.