தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதிய விபத்தில் ஜவுளிக் கடை பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மனைவி புஷ்பராணி (43). இந்த தம்பதிக்கு ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பொன்ராஜ் இறந்து விட்டார். புஷ்பராணி தூத்துக்குடியில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக முள்ளக்காடு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். திருச்செந்தூர் மெயின் ரோட்டை கடந்து செல்ல முயன்றபோது, தெற்கிலிருந்து மேற்காக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த புஷ்பராணி, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.