தூத்துக்குடி: சிறப்பு ரயில்களை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் செயலாளர் மா. பிரமநாயகம் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: தீபாவளி பண்டிகைக்கு தூத்துக்குடி - சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கியமைக்கு எங்கள் பயணிகள் நல சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த தூத்துக்குடி தாம்பரம் ரயிலை திங்கள் தோறும் தூத்துக்குடி தாம்பரம் இடையேயும் செவ்வாய் தோறும் தாம்பரம் தூத்துக்குடி இடையேயும் பொங்கல் பண்டிகை வரை இயக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தாம்பரம்-தூத்துக்குடி ரயிலை மாலையில் 5 மணிக்கு புறப்பட செய்யுமாறு நேரத்தை மாற்றிக் கொடுக்கும் படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வண்டி எண். 06667-06668 திருநெல்வேலி- தூத்துக்குடி, தூத்துக்குடி- திருநெல்வேலி பயணிகள் ரயில் காலை 09-30 மணி முதல் மாலை 6: 25 மணி வரை தூத்துக்குடியில் பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த ரயிலின் கோச்சுகளை வைத்து தூத்துக்குடி-மதுரை இடையே காலையிலும், மதுரை- தூத்துக்குடி இடையே மதிய நேரத்திலும் சிறப்பு ரயிலாக இயக்கினால் தூத்துக்குடி பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். மேலும், காலையில் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு நேரடி ரயில் கிடையாது. என கோரிக்கை விடுத்துள்ளனர்.