கோவில்பட்டியில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, குக்கர் வெடித்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வஉசி நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் குருசாமி. இவரது மனைவி சாந்தி (47), நேற்று (டிசம்பர் 24) வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாராம். அப்போது, குக்கர் திடீரென வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில், சாந்தி காயமடைந்தார். அவரை குருசாமி அப்பகுதியினரின் உதவியுடன் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர், சாந்தி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.