கோவில்பட்டி அருகே பைக் மீது வேன் மோதியதில் தனியார் ஆலை உதவி மேலாளர் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தோப்பம்பட்டியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் ஆரோக்கியதாஸ் (27). விருதுநகரில் உள்ள தனியார் நூற்பாலையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவரும், அவரது நண்பர் லோகேஷும் நேற்று அதிகாலை பைக்கில் விருதுநகரில் இருந்து திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்தார்களாம்.
பைக்கை ஆரோக்கியதாஸ் ஓட்டிச் சென்றார். மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, வேன் வலதுபுறமாக திரும்பியதில், பைக் மீது மோதியதாம். இதில், சம்பவ இடத்திலேயே ஆரோக்கியதாஸ் உயிரிழந்தார். லோகேஷ் பலத்த காயமடைந்தார். தகவலறிந்த உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த லோகேஷை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கும், ஆரோக்கியதாஸ் சடலத்தை உடற்கூறாய்வுக்கும் அனுப்பி வைத்தனர். மேலும், வேன் ஓட்டுநர் வினோத்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.