கோவில்பட்டி நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் கா. கருணாநிதி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் கமலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் மணிமாலா (மதிமுக), சண்முகராஜ் (திமுக), முத்துலட்சுமி (சிபிஎம்), கவியரசன் (அதிமுக), சுரேஷ் (திமுக), ஏஞ்சலா (திமுக), ராமர் (திமுக) உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
நகர்மன்றத் தலைவர் அளித்த பதில்: சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆதார பகுதியில் வாரு வால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தினசரி சந்தை கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்பணிகள் முடிவடைந்து தினசரி சந்தை திறந்தவுடன் அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு கட்டடம் கட்டப்படும். சாலைகளை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றார்.
கூட்டத்தில், ராமசாமிதாஸ் நினைவு பூங்கா நடைபாதையில் உள்ள பழுதுகள், கழிப்பறையை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது, நகராட்சியின் பொறியியல், பொது, சுகாதார பிரிவு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, நகர சுகாதார செவிலியர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்குரிய சீருடைகள் மற்றும் தையல்கூலி வழங்குவது உள்பட 15 பொருள்கள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.