திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல முயற்சித்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட 4 பேரை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்ற இந்து முன்னணி மாநில இணைச் செயலாளர் பொன்னையா என்பவர் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதேபோன்று போராட்டத்தில் கலந்து கொள்ள ரயில் மூலம் செல்வதற்காக கோவில்பட்டி ரயில்வே நிலையத்திற்கு வந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமி காந்தன், இந்து முன்னணி நகரத் தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கமலாதேவி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.