காட்டூர் ஊராட்சியை திருவாரூர் நகராட்சியுடன் இணைப்பதை கைவிட வலியுறுத்தி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் காட்டூர் ஊராட்சியை திருவாரூர் நகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் நகராட்சியை விரிவுபடுத்தும் நோக்கில் சுற்றியுள்ள ஊராட்சிகளான காட்டூர், இளங்காரக்குடி, அம்மையப்பன், பெருந்தரக்குடி, புலிவலம், பவித்திரமாணிக்கம், தண்டலை உள்ளிட்ட ஊராட்சிகளை திருவாரூர் நகராட்சி உடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று கொரடாச்சேரி ஒன்றியம் காட்டூர் ஊராட்சியை திருவாரூர் நகராட்சியுடன் இணைப்பதை கண்டித்தும், நகராட்சியுடன் இணைப்பதால் பொதுமக்களுக்கு வரி சுமை அதிகரிக்கும் எனவும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக திகழும் 100 நாள் வேலை திட்டம் பாதிக்கப்படும் எனவும், அரசின் கிராமப்புற வளர்ச்சிக்கான ஏனைய திட்டங்கள் நகராட்சி உடன் இணைப்பதால் பொதுமக்களுக்கு கிடைக்காமல் போகின்ற வாய்ப்பு உள்ளதாக கூறி 200க்கும் மேற்பட்டோர் காட்டூர் கடை தெருவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முடிவை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.