மன்னார்குடி அருகே எட மேலையூரில் 22 ஊராட்சிகளுக்கு 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான குப்பை சேகரிக்கும் மின் வாகனங்களை அமைச்சர் டி.ஆர். பி. ராஜா தொடங்கி வைத்தார். தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எடமேலையூர் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று வீட்டில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான கழிவுகளை தனித்தனியாகச் சேகரிக்க ஏதுவாக பிளாஸ்டிக் கூடைகளுடன் கூடிய குப்பை சேகரிக்கும் மின்வாகனங்கள் 22 ஊராட்சிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர். பி. ராஜா கலந்து கொண்டு எடமேலையூர், எடக்கீழையூர், வடுவூர், ஒளிமதி உள்ளிட்ட 22 ஊராட்சிகளுக்கு சுமார் 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 35 குப்பை சேகரிக்கும் மின் வாகனங்களை பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஶ்ரீ உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.