மன்னார்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக இன்று காலை நடைபெற்றது. கம்மாள தெருவின் துவக்கமாக அமைந்துள்ள மகா மாரியம்மன், கற்பக விநாயகர், யோக சுந்தர விநாயகர் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. கணபதி ஹோமத்துடன் துவங்கி கோபூஜை, கன்னியா பூஜை, நாடி சந்தானம் ஆகியவை நடத்தப்பட்டு இன்று காலை நான்காவது கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதில் மகா பூர்ணாகுதி நடத்தப்பட்டது. பின்னர் திருக்கடங்கள் புறப்பாடு நடத்தப்பட்டு விமான கோபுர கலசங்களை வந்தடைந்தன. அங்கு மகா மாரியம்மன் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோல் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில், ஸ்ரீ யோகசுந்தர விநாயகர் கோவில் ஆகிய கோவில்களின் விமான கலசத்திலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மூலவர் மகா மாரியம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.