திருவாரூர் நகராட்சியுடன் கீழக்காவாதுகுடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் திருவாரூர் நகராட்சியுடன் தண்டளை, பெருந்தரக்குடி, காட்டூர், கீழக்காவதுகுடி, புலிவலம், அம்மையப்பன் உள்ளிட்ட ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் 100 நாள் வேலை பாதிக்கப்படும், வரி உயர்வு ஏற்படும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம் சாட்டி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் கீழக்காவதுகுடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் சேந்தமங்கலம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழக்காவாதுகுடி ஊராட்சிக்குட்பட்ட பிலாவடிமூளை, சேந்தமங்கலம், விஸ்வாமித்திரைபுரம், வடகால் உள்ளிட்ட பகுதிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பினர்.
வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை ஈடுபட்டு போராட்டத்தை கலைத்தனர். இந்த சாலை மறியல் காரணமாக திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.